Website counter

Sunday, September 4, 2011

நமது தாய் தந்தை

முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் "இறைத்தூதரே! நான் அழகிய முறையில் நடந்துகொள்ள மிகவும் தகுதியானவர் யார்?'' என்று கேட்டார்.

நபி (ஸல்) அவர்கள் "உமது தாய்'' என்றார்கள்.

"பிறகு யார்?'' என்று கேட்டார்.

"உமது தாய்'' என்றார்கள்.

"பிறகு யார்?'' என்று கேட்டார்.

"உமது தந்தை'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

(ஆதாரம்: புகாரி)

இஸ்லாம் வலியுறுத்தும் மிக முக்கியக் கடமைகளில் பெற்றோருக்கு உபகாரம் செய்வது குறிப்பிடத்தக்கதாகும். வேறெந்த மதத்திலும் இல்லாத, மனிதகுலம் கண்டிராத உயரிய அந்தஸ்தை பெற்றோருக்கு இஸ்லாம் மட்டுமே வழங்கியுள்ளது. அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதற்கும், அவனை வணங்குவதற்கும் அடுத்ததாக பெற்றோருக்கு உபகாரம் செய்வதை இஸ்லாம் அமைத்துள்ளது.

தாய் தந்தைக்கு உபகாரம் செய்யும்படியும் அவர்களிடம் பணிவன்புடன் நடந்து கொள்ளும்படியும் அறிவுறுத்தும் குர்ஆன் வசனங்கள்:

அல்லாஹ்வையே வணங்குங்கள். அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள். பெற்றோருக்கு நன்றி செய்யுங்கள். (அல்குர்அன் 4:36) 

(நபியே!) உமதிறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய், தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். அவர்களில் ஒருவரோ, அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட போதிலும் உம்மிடமிருந்து அவர்களை வெருட்டவும் வேண்டாம், அவர்களை (நிந்தனையாக)ச் "சீ' என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாக(வும் அன்பாக)வுமே பேசும்.

அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! அன்றி, என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து, பரிபாலித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக! என்றும் நீர் பிரார்த்திப்பீராக!
 (அல்குர்அன் 17:23,24) 

தாய் தந்தைக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு நல்லுபதேசம் செய்திருக்கின்றோம்... (அல்குர்அன் 29:8)

தமது தாய் தந்தை(க்கு நன்றி செய்வது)பற்றி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய், துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து (கர்ப்பத்தில்) அவனைச் சுமந்தாள்... (அல்குர்அன் 31:14) 

இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பெற்றோருக்குப் பணிவிடை செய்வதன் சிறப்பைப் பற்றி பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார்கள். 

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வுக்கு உவப்பான அமல் எது'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் "தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது'' என்றார்கள். "பின்பு என்ன'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் "பெற்றோருக்கு உபகாரம் செய்வது'' என்றார்கள். "பின்பு என்ன'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது'' என்றார்கள்.
(ஆதாரங்கள்: ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஒரு மனிதர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஹிஜ்ரத் மற்றும் ஜிஹாது செய்வதற்கு வாக்குபிரமானம் செய்ய விரும்பி நபி (ஸல்) அவர்களிடம் அனுமதிகோரி நின்றார். நபி (ஸல்) அவர்கள் அவரிடத்தில் "உமது பெற்றோரில் எவரேனும் இருவர் இருக்கிறார்களா?'' என்று கேட்டார்கள். அம்மனிதர் "ஆம்! இருவரும் இருக்கிறார்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள் "நீர் அல்லாஹ்விடம் நற்கூலியை விரும்புகிறீரா?'' என்று கேட்டார்கள். அம்மனிதர் "ஆம்'' என பதிலளித்தார். கருணைமிகு நபி (ஸல்) அவர்கள் ""உமது பெற்றோரிடமே நீர் திரும்பிச் சென்று அவ்விருவர்களிடமும் உபகாரமாக நடந்துகொள்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

அபூ பக்கர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

"உங்களுக்கு பாவங்களிலெல்லாம் மிகப்பெரிய பாவத்தை அறிவிக்கட்டுமா'' என நபி (ஸல்) அவர்கள் மூன்றுமுறை கேட்டார்கள்.

நாங்கள் "அறிவித்துத் தாருங்கள் அல்லாஹ்வின் தூதரே!'' என்று கூறினோம்.

நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோருக்கு நோவினை செய்தல்'' என்று கூறினார்கள்.
(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

1 comment:

  1. Alhamdulillah..nalla padhivu ithai nan Matra varuku paghirgiraen

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...