Website counter

Sunday, September 4, 2011

கோபம் நம்மை ஆளுகிறது


"(பயபக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக்கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் தவறு)களை மன்னிப்பார்கள்." (அல்குர்ஆன் 3 : 134)


நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து 'எனக்கு உபதேசம் செய்யுங்கள்' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்'கோபம் கொள்ளாதே!' எனக் கூறினார்கள். மீண்டும் அந்த மனிதர் 'உபதேசம் செய்யுங்கள்' எனக்கூறவே, மீண்டும்'கோபம் கொள்ளாதே' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) - நூல் : புகாரி)


"கோபத்தின் போது தன்னை கட்டுப்படுத்திக் கொள்பவனே சிறந்த வீரன் ஆவான்" என நபி ( ஸல் ) அவர்கள் அருளினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) - நூல்கள் : புகாரி , முஸ்லிம்)


பொதுவாகவே ஷைத்தான் மனிதனை ஆக்ரமிப்பதற்கு முதல்படியே அவனது கோபத்தைத் தூண்டி விடுவதுதான். தேவையில்லாத, உப்புப்பெறாத விஷயத்திற்கெல்லாம் ஒருவர் கோபப்பட்டால் அவரிடம் ஷைத்தான் குடி கொண்டிருக்கிறான் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம். எதிரில் யார் இருக்கிறார் என்று கூடத் தெரியாத அளவுக்கு பேசித் தீர்த்து விடுவார். சிலவேளை ஏச்சுப் பேச்சுக்களையும் மீறி சட்டை கையை மடக்கி முழங்கைக்கு மேல் உயர்த்திக் கொண்டு பாய்வதற்கும் தயாராகி விடுவார். பின்விளைவுகளைப் பற்றிக்கூட யோசிப்பதில்லை. கோபம் கொண்ட அந்த வினாடியில் அவரது சிந்தனைத்திறன் செயலிழந்து விடுகிறது.


மேலும் ஒருவன் தன்னை வீரன் என்று காட்டுவதற்காகவும் கோபத்தைக் காட்டுவான். 'அவர் பெரிய கோபக்காரர். அவருக்கு கோபம் வந்தால் அவரை யாராலும் கட்டுப்படுத்தவே முடியாது'என்றெல்லாம் கோபம் கொள்பவர்களை சிலாகித்து ஒரு சிலர் கூறி அவரை வாழ்நாள் முழுவதும் கோபக்காரராக்கி விடுவார்கள். அதற்கு தகுற்தாற் போல் அவரும் தன்னை ஆக்கிக்கொள்வார். தேவையில்லாததற்கெல்லாம் கோபப்படுவார். இவருக்கு சமுதாயம் 'வீரன்', 'தைரியசாலி' என்றெல்லாம் பட்டம் சூட்டி விடும்!


கோபம் மனிதனுக்கு தேவை தான்! ஆனால் அதை சூழ்நிலைக்கேற்ப பயன்படுத்த வேண்டும். அதைக் கட்டுப்படுத்த வேண்டிய நேரத்தில் கட்டுப்படுத்தவும் பழகிக் கொள்ள வேண்டும். நமது கோபம் நம்மையே மிகைத்துவிட அனுமதிக்கக் கூடாது!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...